காய்கறி சந்தையில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்து முதல்வர்

தூத்துக்குடி: மார்ச் 26: தூத்துக்குடியில் நடைபயிற்சி மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. திமுக வேட்பாளர் கனிமொழி, ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து முதல்வர் பரப்புரை மேற்கொள்கிறார். முதல்வர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து காய்கறி சந்தை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்த முதல்வரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். தூத்துக்குடி காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரத்தையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். வாக்குசேகரிப்பின்போது முதலமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.