காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா

காரைக்கால்: மே 4: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை நினைவுகூரும் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு விழா ஜூன் 19- ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, பிரகார உலாவாகக் கொண்டு வரப்பட்டு, கோயில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர், அம்மையார் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.காளிதாசன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஜூன் 19-ம் தேதி மாலை பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் விழா தொடங்குகிறது.