கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்

புதுடெல்லி,செப். 23 – காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிட இறுதியாக மறுத்துவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் நாளை முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கும். ஓட்டுகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் ராகுல் போட்டியிடுவாரா, இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர் போட்டியிடாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், தேர்தலில் குதிக்கலாம் என்று தெரிகிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, கட்சி தலைவர் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக, அசோக் கெலாட்டிடம் சோனியா தெரிவித்துள்ளார். இதே பதிலைத்தான் அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பிய எம்.பி. சசிதரூரிடமும் கூறியுள்ளார்.