கார் பயணி மீது தாக்குதல்: ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

பெங்களூரு, மே 23: முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் கார் பயணியை ஸ்கூட்டர் ஓட்டுநர் தாக்கிய சம்பவம் வர்தூரில் நடந்தது தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.
மே 17 ஆம் தேதி சர்ஜாபூர் சாலையில் நடந்த தாக்குதலின் வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியிடப்பட்டது மற்றும் புகார் அளிக்கப்பட்டது. அதில் ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர், காரில் பயணம் செய்த‌ ஒருவரைத் தாக்கினார்.
சர்ஜாபுரா சாலையில் தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து, கேரளாவைச் சேர்ந்த அகில் சாபு என்பவர், வர்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சர்ஜாபூர் சாலையில் குடும்பத்துடன் காரில் மருத்துவமனைக்கு அகில் சாபு சென்று கொண்டிருந்தபோது, ​​ஹோண்டா ஆக்டிவா ஸ்ட்டரில் வந்த ஒருவர் அவரை முந்திச் செல்ல முயன்றார். இதன்போது நடுத்தெருவில் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது, ​​ஸ்கூட்டர் ஓட்டுநர், காரின் இடது பக்க கண்ணாடியை ஹெல்மெட்டால் அடித்து உடைத்துள்ளார். இதில் காரில் இருந்த அகிலின் மனைவி மற்றும் குழந்தை படுகாயம் அடைந்தனர்.
இதை கேள்வி எழுப்பிய அகிலை தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. ஜெகதீஷ் மீது வர்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.