கார், வேன் நேருக்கு நேர் மோதி4 தொழிலாளிகள் பலி

மதுராந்தகம்: செப்டம்பர் 9- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்று இரவு மதுராந்தகம் நோக்கிச் சென்றது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மதுராந்தகத்தை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் காரில் பயணம் செய்த சக்திவேல், அணைக்கட்டு கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேசன், பூவரசன் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் பூவரசன் பரிதாபமாக இறந்தார். வேனை ஓட்டி வந்த பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.