காலக்கெடு 30 நாட்களாக குறைப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி, ஆக. 1- பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு அரசு தீர்வு காணும் அதிகபட்ச கால வரம்பு 60 நாட்களில் இருந்து 45 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் குறைகளை தீர்க்கும் முறையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு இணங்க தற்போது அந்த காலக்கெடு 30 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வுத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துறைகள் ரீதியான மீளாய்வுக் கூட்டங்களில், பிரதமரே பொதுமக்களின் குறைகளின் நிலையை ஆய்வு செய்வதாகவும் மந்திரி சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் மனநிறைவு மற்றும் நேரக் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய இரட்டைக் காரணிகளால் பொதுமக்கள் குறைகள் தொடர்பான வழக்குகள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது குடிமக்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் மந்திரி கூறியுள்ளார். மோடி அரசின் முக்கிய மந்திரம், கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் நலத்திட்டங்களின் அனைத்துப் பலன்களும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.