காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை: ஜன.4-
சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஜன.9-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இதுதொடர்பான 2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் தரப்பில்அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடிம.இராசு, ஆர்.ஆறுமுகம், டி.திருமலைசாமி, பாலன், கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார். சுமார் 4 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.இதற்கிடையே, ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.