காலிறுதியில் ஸ்பெயின் வெற்றி: வெளியேறிய ஜெர்மனி

ஸ்டட்கார்ட், ஜூலை 6- நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி வெளியேறியுள்ளது. ஸ்டட்கார்டில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கோல் பதிவு செய்தது ஸ்பெயின். ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஒல்மோ முதல் கோலை பதிவு செய்தார். லேமினே கொடுத்த நேர்த்தியான பாஸ் ஒன்றை அப்படியே வலைக்குள் லாவகமாக அவர் தள்ளி இருந்தார். பெத்ரிக்கு மாற்றாக அவர் களத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் கோல் போடும் வகையில் ஜெர்மனி முயற்சி மேற்கொண்டது. 77-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபுல்க்ரக் அடித்த ஷாட் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. கிட்டத்தட்ட கோல் வாய்ப்பை ஜெர்மனி மிஸ் செய்தது. இருந்தும் 89-வது நிமிடத்தில் ஜெர்மனியின் புளோரியன் விர்ட்ஸ் பதில் கோல் போட்டிருந்தார். அதன் பின்னர் ஆட்டத்தில் 90 நிமிடங்கள் மற்றும் ஸ்ட்டாபேஜ் நேரம் முடிந்த பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா டைம்) வழங்கப்பட்டது. இதில் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் வாய்ப்புக்காக முயற்சி மேற்கொண்டன. இரண்டாவது 15 நிமிடங்களில் மேலும் ஒரு கோல் பதிவு செய்தது ஸ்பெயின். ஆட்டத்தின் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மெரினோ கோல் பதிவு செய்தார். ஒல்மோ பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி வலைக்குள் தள்ளி இருந்தார் மெரினோ. அதன் மூலம் ஸ்பெயின் அணியின் வெற்றி உறுதியானது. இந்த தோல்வி ஜெர்மனிக்கு அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. இந்தப் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இதுவரை ஸ்பெயின் அணி எந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவவில்லை. ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் – ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அதிக ஃபவுல்கள் செய்யப்பட்டன. மேலும், ஸ்பெயின் வீரர் டேனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. அதே போல அடுத்த போட்டியை ஸ்பெயினின் மொராட்டா மிஸ் செய்கிறார்.