கால்பந்து குறித்த மணல் சிற்பம்: பூரி கடற்கரையில் உருவாக்கம்

பூரி, நவ. 21- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் கத்தாரில் நேற்று தொடங்கிய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் பங்கேற்ற போது இந்த நாணயங்களை சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.