காவிரி கரையில் புனித நீராட கட்டுப்பாடுகள்

சென்னை: ஆக். 3 -இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. தற்போது காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அகண்ட காவிரி கடல் போல் காட்சி அளிக்கிறது.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு நாளன்று காவிரி கரையோரங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில் பாரம்பரிய நிகழ்வான ஆடிப்பெருக்கை கொண்டாட தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் களை கட்டியது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர்.
காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.