பெங்களூர் ஆகஸ்ட் 23-
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்து இருந்தார். அதன்படி கா்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கும் விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது கர்நாடகம் சார்பில் எந்த மாதிரியான அம்சங்களை எடுத்து வைப்பது என்பது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் போதிய பருவமழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது மாநிலம் முழுவதும் பல மாவட்டங்கள் வறட்சியில் தவிக்கிறது குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது இந்த நிலையில் தமிழ்நாட்டில் காவிரி நீர் வழங்க கர்நாடகத்தில் ஆளும் கட்சி உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருப்பதால் கர்நாடக மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் காவேரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதாக பிஜேபி கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது