பெங்களூரு, செப்டம்பர் 23:
காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் வெடித்தது. மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அங்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெங்களூரில் கர்நாடக மாநில பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது ஜெய் கர்நாடகா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கன்னட சங்கங்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டங்கள் நடத்தின. போராட்டம் நடத்தப்பட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதேசமயம் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் மண்டியா மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பிஜேபி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் கன்னட அமைப்புகள் விவசாய சங்கங்கள் கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து ஆவேசமாக முழக்கமிட்டன. கர்நாடக மாநிலத்தில் இந்த முறை போதுமான அளவில் மழை பெய்யாத காரணத்தால் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்கப்படவில்லை இந்த நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்றும் காவேரி ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது. இது கர்நாடக மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது கர்நாடக மாநில மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்து போராட்டங்களில் குதித்து உள்ளனர் இன்று நடந்த பந்து உள்ளிட்ட போராட்டங்களுக்கு பரவலான ஆதரவு இருந்ததை காண முடிந்தது
பெங்களூரு-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன போக்குவரத்துக்கு மாற்று பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பல்வேறு அமைப்பினர் பைக் பேரணி நடத்தினர். விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதே நேரத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிராக மண்டியாவில் பாஜக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. பாஜக பிரமுகர் சிவக்குமார் ஆராத்யா மண் சாப்பிட்டு கடும் போராட்டம் நடத்தினார்.
மாநில அரசின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அவர், விவசாயிகள் வாயில் சேற்றை வாரி இறைத்துள்ளதாகவும் ஆவேசமாக தெரிவித்தார்.
மாண்டியா, மத்தூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பெங்களூருவில் காவிரி நதிநீர் பிரச்சனையை அடுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்க சுதந்திர பூங்காவில் கன்னட ஆதரவு அமைப்புகள் கூடுகின்றன.
கேஆர்எஸ் நீர்மட்டம் 96 அடியாக குறைந்து உள்ளது
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தமிழக அரசு தண்ணீர் திறந்து வருகிறது. நேற்று தமிழகத்திற்கு 2,673 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதேநேரம், நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ள போதிலும், நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 5,845 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,167 கனஅடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., நீர்மட்டம், 96.90 அடியாக சரிந்துள்ளது.