காஷ்மீரில் தாக்குதல் அதிகரிப்பு தடுக்க அமித்ஷா ஆலோசனை

ஸ்ரீநகர், ஜூன்3 – காஷ்மீரில் கடந்த 31 ஆம் தேதி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல நகரங்களில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, துணை ராணுவப் படைகளின் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் நிர்வாகம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.