காஷ்மீரில் பண்டிட் சமூகம் மீது தாக்குதல் அமித்ஷா நாளை முக்கிய ஆலோசனை

புதுடெல்லி, ஜூன்2 –
ஜம்மு காஷ்மீரில் கடந்த 31 ஆம் தேதி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல நகரங்களில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, துணை ராணுவப் படைகளின் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் நிர்வாகம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பதினைந்து நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மே 17 அன்று ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை அவர் ஆய்வு செய்தார்.