காஷ்மீர் எல்லையில் வீரர்களுக்கு உதவும் பன்காரா வகை நாய்கள்

ஸ்ரீநகர், செப். 9- காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை கண்காணிக்க, ‘பன்காரா’ வகை உள்ளூர் நாய்கள் நம் வீரர்களுக்கு உதவியாக இருப்பதுடன், அவர்களின் உற்ற நண்பனாகவும் உள்ளன. ஜம்மு – காஷ்மீர் எல்லை யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் வீரர்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர். எல்லைப் பகுதியில் எவ்வளவு விழிப்புடன் செயல்பட்டாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி விடுகின்றனர். இதற்கு அதிக குளிர், முழங்கால் வரை பனிக்கட்டிகளுக்குள் புதையும் மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நம் பாதுகாப்புக்காக, எல்லையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரையே பணயம் வைத்து பணியாற்றும் நம் வீரர்களுக்கு, பன்காரா நாய்கள் உற்ற நண்பனாக உள்ளன. இமயமலை அடிவாரங்களில் மட்டும் காணப்படும் இந்த வகை நாய்கள், பன்காரா, கடி, போட்டியா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஆடு, மாடுகளை மேய்த்து செல்பவர்களுடன் பாதுகாப்புக்காக அழைத்து செல்லப்படும் இந்த வகை நாய்கள், பிறவியிலேயே அதிக எச்சரிக்கை உணர்வு உடையவை. முறையான பயிற்சி இல்லாமலேயே சிறிய சத்தங்கள், வாடைகளை மோப்பம் பிடித்து, புதிய ஆட்களை அடையாளம் கண்டு விரட்டும் திறன் உடையது இந்த நாய்கள், எல்லைப் பகுதியில் காவலில் இருக்கும் நம் வீரர்களின் உற்ற நண்பனாக உள்ளன. எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் தென்பட்டாலோ, சிறிய சத்தம் கேட்டாலோ உடனடியாக நம் வீரர்களை எச்சரித்து, அவர்களுடன் களத்தில் நிற்கும் அளவுக்கு இந்த நாய்களுக்கு புத்திசாலித்தனம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்