காஷ்மீர் பெண்கள் தயாரித்த தேசிய கொடிகள்: அமித்ஷா பரிசு

புதுடில்லி, ஆக. 3- பா.ஜ., நிர்வாகிகள் அனைவருக்கும், காஷ்மீர் பெண்கள் தயாரித்த தேசியக் கொடியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிசாக அனுப்பி வைத்து உள்ளார். ஏற்பாடு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை, அமுதப் பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும், வரும் 13 முதல் 15-ம் தேதி வரை, மூவர்ண தேசியக் கொடியை, வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மைதானங்கள், கட்டடங்களில் 24 மணி நேரமும் பறக்க விடுமாறு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதற்காக, ‘வீடுதோறும் தேசியக் கொடி’ இயக்கத்தையும், அவர் அறிவித்துள்ளார். இதற்காக தேசியக் கொடி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. மக்கள் அனைவருக்கும் தேசியக் கொடிகள் கிடைக்க வசதியாக, அனைத்து தபால் நிலையங்களிலும், மத்திய அரசின் ‘ஜெம்’ இணையதளம் வாயிலாக தேசியக் கொடிகளை விற்பனை செய்ய, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் அனைவருக்கும், காஷ்மீர் பெண்கள் தயாரித்த தேசியக் கொடியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிசாக அனுப்பி வைத்துஉள்ளார். காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை உணர்த்துவதற்காக, காஷ்மீரில் உள்ள மகளிர் குழுக்கள் வாயிலாக, தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டுஉள்ளன. பா.ஜ., இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட, ஏழு அணிகளின் தேசிய செயற்குழு கூட்டம், பீஹார் தலைநகர் பாட்னாவில், ஜூலை 30, 31 தேதிகளில் நடந்தது. அதில் பங்கேற்ற 1,000 பேருக்கும், காஷ்மீர் பெண்கள் தயாரித்த தேசியக் கொடியை வழங்கி உள்ளனர். அதைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களுக்கும் காஷ்மீர் பெண்கள் தயாரித்த ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகளை, அமித்ஷா அனுப்பி வைத்து உள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.