கியான்வாபி மசூதியில்ஆய்வு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

வாரணாசி: ஆக.4- உத்தரப் பிரதேசம், வாரணாசியில் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று (வெள்ளி) காலை ஆய்வு தொடங்கியது. பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியை இந்திய தொல்லியல் துறை கோரி நாடியிருந்த நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் ஆய்வை ஒத்திவைக்குமாறு தொல்லியல் துறைக்கு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்றைய ஆய்வில் மசூதி தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கியான்வாபி மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி கடந்த 2021 ஆக.18-ம் தேதி 5 இந்துபெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த ஆண்டுமே மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசூதி ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடக் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா, மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்த சமீபத்தில் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்து, உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது.இதன்படி உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரித்திங்கர் திவாகர் விசாரணை நடத்தினார்.மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி திவாகர், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தார். இதன்படி, கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்நிலையில் இன்று காலை மசூதிக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆய்வு நடைபெற்று வருகிறது.