கிரடிட் கார்டு பயன்படுத்தி ரூ. 4 லட்சம் மோசடி

மும்பை, மே 28- பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ரூ. 3.82 லட்சத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பரிவர்த்தனை செய்ததாக அவரது உதவியாளர் புகார் அளித்துள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக போனி கபூரின் கிரெடிட் கார்டை அவருக்கு தெரியாமலே மர்ம நபர்கள் பயன்படுத்தி பொருள்களை வாங்கி இருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியில் இருந்து போனி கபூருக்கு அழைப்பு வந்தது. அதில் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று வங்கி ஊழியர் தெரிவித்திருந்தார். அதன் பிறகுதான் கிரெடிட் கார்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு இருப்பதே போனி கபூருக்கு தெரிய வந்தது. போனி கபூர் உடனே வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பயன்படுத்திய விவரங்களை கேட்டு பெற்ற போது ரூ.3.82 லட்சம் அளவுக்கு போனி கபூர் கிரெடிட் கார்டில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மொத்தம் 5 பரிவர்த்தனைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போனி கபூரின் உதவியாளர் மும்பை அந்தேரி அம்போலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிரெடிட் கார்டில் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்திய ஐபி ஐடியை பயன்படுத்தியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’, உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களை போனி கபூர் தயாரித்துள்ளார். தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.