கிருஷ்ணகிரியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை:குடிசை சரிந்து விழுந்து முதியவர் பலி


கிருஷ்ணகிரி, ஏப்.7-
கிருஷ்ணகிரியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்து தொழுகையில் ஈடுபட்ட முதியவர் பலியானார். மேலும் பலத்த சூறைக் காற்றால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
கிருஷ்ணகிரியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்து தொழுகையில் ஈடுபட்ட முதியவர் பலியானார். மேலும் பலத்த சூறைக் காற்றால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
சூறைக்காற்றுடன் மழை
கிருஷ்ணகிரி நகரில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. மேலும் காற்றுக்கு வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் பறந்து விழுந்தன.
கிருஷ்ணகிரி நகரில் நேற்று வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் நகரில் நேற்று மாலை 4.30 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. இரவு 8 மணி தாண்டியும் மின்சாரம் வரவில்லை. மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் பலத்த மழை பெய்ததால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடானது.
முதியவர் பலி
இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் சின்ன ஏரிக்கரை சாலையின் பின்புறம் முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதி கட்டி வருகிறார்கள். இதனால் புதிதாக கட்டி வரும் மசூதியின் முன்பு இருந்த காலி இடத்தில் தொழுகை செய்ய பெரிய அளவில் குடிசை அமைத்திருந்தனர். இங்கு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை இங்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சூறைக்காற்றால் குடிசையின் மேற்கூரை சரிந்தது. இதில் அனைவரும் வெளியே ஓடி வந்த நிலையில், ஜாபர் (வயது 60) என்பவர் குடிசையின் அடியில் சிக்கிக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஓட்டு போட வந்தவர்
இறந்த ஜாபர் முன்பு கிருஷ்ணகிரியில் டீ கடை நடத்தி வந்தார். பின்னர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்ற அவர் சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குடிசை விழுந்ததில் அவர் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.