கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு


கிருஷ்ணகிரி, ஏப்.7-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குச்சாவடிக்கு முக கவசம் அணிந்து வந்த வாக்காளர்களுக்கு முதலில் உடலில் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு கையுறை வழங்கப்பட்டது. பின்னர் கைகளுக்கு சானிடைசர் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை பாகம் எண் ஆகியவை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் முக கவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, அவரது மனைவியுடன் வந்து கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் முதியவர்கள், மூதாட்டிகள் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சிறிது கோளாறு ஏற்பட்டது. அதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். காலை 7 மணி முதல் மாவட்டம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டார்.
ஓசூர் பஸ்தியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஓசூர் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.