கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர் வேதனை

புதுடெல்லி, மே 20- மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளநிலையில், அங்கு பயிலும் இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். உள்ளூர் மக்களின் தாக்குதலால், விடுதியை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில் “உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக 24 மணி நேரமும் ஹாஸ்டல் விளக்கை அணைத்தே வைத்திருக்கிறோம். எங்களால், சாப்பாட்டுக்காக கேண்டீன்கூட செல்ல முடியவில்லை. விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளோம். தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசம். வீட்டை விட்டு வெளியே வந்தால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. நாங்கள் இந்தியா திரும்ப விரும்புகிறோம்” என்றார். கிர்கிஸ்தானில் மருத்துவப் படிப்புக்கான செலவு குறைவு என்பதால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவம் படித்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் மருத்துவம் பயில்கின்றனர்.கடந்த மே 13-ம் தேதி, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில்உள்ளூருரைச் சேர்ந்தவர்களுக்கும் எகிப்திய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எகிப்து மாணவிகளை உள்ளூரைச்சேர்ந்தவர்கள் துன்புறுத்திய நிலையில், அதற்கு எதிர்வினையாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் தங்கிஇருக்கும் விடுதிகளை உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான், எகிப்து மாணவர்களைத் தேடித் தாக்கத் தொடங்கினர். இதனால், அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.