கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தயாராகும் ரஷ்யா

கீவ் ஜூன் 10
உக்ரைனில் ரஷிய படைகளிடம் இங்கிலாந்து நாட்டினர் ஐடன் அஸ்லின் (வயது 28), ஷான் பின்னர் (48) மற்றும் மொராக்கோவை சேர்ந்த சவுதின் பிராகிம் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். அவர்கள் மீது உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கோர்ட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது ஆகும். கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டினர் இருவரும் உக்ரைன் படையினர் என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கீவ் நகரில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க தொழில் அதிபரும், நன்கொடையாளருமான ஹோவர்ட் பப்பெட் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், போரினால் சிதைந்துள்ள உக்ரைனை மறுகட்டமைப்பு செய்யவும், கண்ணிவெடிகளை அகற்றவும், பள்ளிக்கூடங்களில் ஊட்டச்சத்து மேம்படுத்தவும் உதவத்தயார் என கூறினார். இதற்கிடையே உக்ரைனில் ரஷியா கைப்பற்றியுள்ள துறைமுக நகரமான மரியுபோலில் ஐந்தில் இரு பங்கு கட்டிட இடிபாடுகளில் தேடியதில் ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் பிணவறை மற்றும் குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

இந்த அதிர்ச்சி தகவலை அந்த நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆன்ட்ரியுஷ்செங்கோ சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.