குஜராத், இமாச்சலுக்கு ரூ.971 கோடி நிதி

புதுடெல்லி:டிச.13- இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக குஜராத்துக்கு ரூ.338 கோடியும் இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.633 கோடியும் விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “குஜராத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க எம்எச்ஏ ஒப்புதல் அளித்துள்ளது. பிபர்ஜாய் புயலால் குஜராத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்தப் பேரிடரின்போது உயிரிழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடும் புயலுக்குப் பிறகு மாநில அரசு கேட்டுக்கொள்ளும் வரை காத்திருக்காமல் சேத விவரங்களை மதிப்பிட மத்தியக் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. குஜராத் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு முதல் தவணையாக ஏற்கெனவே ரூ.584 கோடி விடுவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.633.73 கோடி கூடுதல் நிதியுதவி வழங்க எம்எச்ஏ ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் மற்றும்நிலச்சரிவால் இம்மாநிலம் கடுமையாகபாதிக்கப்பட்டது. அங்கு சேத விவரங்களை மதிப்பிட உடனடியாக மத்தியக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு இரு தவணைகளாக ரூ.360.80 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.