குஜராத்: காந்தி நகரில் உள்ள சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்

காந்திநகர், ஜூன். 16பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா மோடி வரும் 18ஆம் தேதி தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் உள்ள கட்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் ஹிராபா மோடியின் நீண்ட ஆயுளுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 18-ந் தேதி குஜராத்திற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பவாகத் கோயிலுக்குச் சென்று பின்னர் வதோதராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் போது தமது தாயாரை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காந்தி நகரில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை சூட்டப்படும் என்று அந்நகர மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்துள்ளார். மாநில தலைநகரில் உள்ள மக்களின் கோரிக்கை மற்றும் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.