குஜராத் சட்டசபையில் அமளி – 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

அகமதாபாத்: செப் 22-
குஜராத் சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா எழுந்து, அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா மறுப்பு தெரிவித்தார். உடனே சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை இருக்கைகளுக்குச் சென்று அமரும்படி சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காததால், அவர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை சட்டசபை விவகாரத்துறை மந்திரி ராஜேந்திர திரிவேதி கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை நேற்று ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.