குஜராத் சட்டசபை தேர்தலில் 1,621 பேர் போட்டி

ஆமதாபாத், நவ.23-
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிற இந்த மாநிலத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது. மும்முனைப் போட்டி நடைபெறுகிற தேர்தலில் பிரசார களத்தில் சூடேறி வருகிறது. முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தல் 93 இடங்களில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ளன. இந்த நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர். ஆளும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கித்தந்து விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடச்செய்துள்ளது.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார். எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.