குஜராத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளரை தவிர்த்த காங்கிரஸ்

காந்திநகர்: மே 7
குஜராத் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிட 35 முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை.
பொதுவாக, பருச் மக்களவைத் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்துவது வழக்கம். ஆனால், இம்முறை இண்டியா கூட்டணி சார்பாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தின் காரணமாக இம்முறை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவுத் தலைவர் வஜிர்கான் பதான் கூறுகையில், “பருச் மக்களவைத் தொகுதியில் இம்முறை இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் முஸ்லிம் வேட்பாளருக்கு சீட் வழங்க முடியவில்லை. குஜராத் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முஸ்லிம் வேட்பாளருக்கு சீட் வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
ஆனால், குஜராத்தில் முஸ்லிம்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் இல்லை.
இதனால், முஸ்லிம் தரப்பிலிருந்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. அகமதாபாத் மேற்கு மற்றும் கட்ச் தொகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவை பட்டியலினத்தவர்களுக்கான தனித்தொகுதிகள். அங்கு முஸ்லிம்கள் போட்டியிட முடியாது” என்று தெரிவித்தார்.
குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 25 தொகுதிகளில் 35 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்கள்.