குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கிடைக்காமல் 459 குடும்பங்கள் தவிப்பு

பெங்களூரு, நவ. 11: உத்தரஹள்ளி புவனேஸ்வரி நகரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 459 குடும்பங்கள் இன்னும் வீடுகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். போராட்டம் நடத்தி, மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்த‌னர்.புவனேஸ்வரி நகரின் 12 ஏக்கர் பரப்பளவில் 30 ஆண்டுகளாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான ஏழைக் குடும்பங்கள் அங்கு குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்த இடத்தில் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அங்கு வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததையடுத்து, அங்கிருந்த‌ குடிசைகளை அகற்றினர். அந்த இடத்தில் ‘நர்ம்’ திட்டத்தின் கீழ் 880 குடியிருப்புகள் கட்டப்பட்டு, முதல் தவணையாக 421 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 459 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள வீடுகளை தகுதியானவர்களுக்கு வழங்கி, பட்டா வழங்க வேண்டும். ஆனால், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், ரூ.23 லட்சம் முதல் 4 லட்சம் வரை கொடுத்தவர்களுக்கு முறைகேடாக வீடுகளை ஒதுக்கி வருகின்றனர். குடிசைவாசிகள் அல்லாதவர்கள் வீடுகளைப் பெற முயற்சி செய்கிறார்கள். இது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மாரேச‌ந்திர முனியப்பா தெரிவித்தார்.