குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க அரசு ஏற்பாடு

சென்னை: ஏப். 27: கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அரசு சார்பில் குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே, உள்மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: பசிபிக் கடல் பகுதியில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிப்பது உள்ளிட்ட அப்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை எல்நினோ என்கிறோம். தற்போது பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ நிலவுகிறது. அவ்வாறு நிலவும்போது இந்திய பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளது.
வரும் நாட்களில் வானில் மேகக்கூட்டங்கள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதனால் கோடை மழை பெய்யவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 30-ம்தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி, இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.