குடிநீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும்

மதுரை: மார்ச் 22. எத்தனை வளங்கள் இருந்தாலும் ஒரு நாட்டில் நீர் வளம் இல்லாவிட்டால் அந்த நாடு மக்கள் வசிக்க முடியாத பாலைவனமாகி விடும். பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மை கொண்டது. 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர். இதில், மிகக் குறைவான 1.2 சதவீதம்தான் நுகர்வுக்குரியது.
மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு தயாரிப்பது, சமைப்பது, அருந்துவது, குளிப் பது போன்ற பல செயல்களுக்கு தண்ணீர் இன்றியமையாதது. அதேபோல் பாசனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் அத்தியாவசிய மாகிறது. இந்தியா நதிகளின் நாடு. ஆனால், தற்போது பெரும்பாலான நதிகள் மாசுபட்டுள்ளன. இவற்றை முறையாகப் பராமரிக்காததால் நாட்டில் பல நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையை ஆண்டுதோறும் எதிர்நோக்குகின்றன. அதேபோல், டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களும் கோடை காலத்தில் மிகப்பெரிய குடிநீர் பற்றாக் குறையைச் சந்திக்கின்றன. தென்தமிழகத்தில் வைகை ஆறு, ஏராளமான கண்மாய்கள் என செழிப்பான நகரமாக மதுரை திகழ்ந்தது. காலப்போக்கில் கட்டிடங்கள், பாலங்கள், சாலை அமைப்பதற்கு கண்மாய்கள் அழிக்கப்பட்டதால் தற்போது கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.அவ்வாறு அழிக்கப்பட்ட நீர்நிலைகள் பெயரிலே மதுரையில் தல்லாகுளம், பீபி குளம், மாடக்குளம், சொக்கிகுளம் போன்ற 25-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. நீர்நிலைகளின் முக்கியத்துவம், அதனை எதிர்கால தலைமுறையினருக்குப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுகளுக்கும், மக்களுக்கும் சரியான புரிதல் இல்லாததால், நீர்நிலைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியருமான மு.ராஜேஷ் கூறியதாவது: 163 மில்லியன் இந்தியர்களுக்குச் சுத்தமான குடிநீர் இல்லை. 21 சதவீத நோய்கள் பாதுகாப்பற்ற குடிநீருடன் தொடர்புடையவை. கலப்பு நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையின்படி 2030-ம் ஆண்டில் நாட்டின் தண்ணீர் தேவை, விநியோகத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.