குடிநீர் பிரச்சனையை சமாளிக்க போர்வெல்கள் தோண்டும் பணி தீவிரம்

பெங்களூர், ஏப்ரல் 1 –
மாநில தலைநகர் பெங்களூரில் தற்போதுள்ள குடிநீர் பிரச்சனையை போக்க குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சமீபத்தில் தோண்டிய 45 போர்வெல் களில் 42 ல் தண்ணீர் பொங்கிவந்துள்ளது. நீர்வாரியம் பெங்களூருக்கு தொடர்ந்து காவிரியிலிருந்து 1450 எம் எல் டி மற்றும் போர்வெல் களிலிருந்து கிடைத்துவந்த 650எம் எல் டி சேர்த்து 21000 லட்ச தண்ணீரை விநியோகித்து வந்தது. இந்தாண்டு மழை குறைபாடால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் போர்வெல்கள் வற்றி போயுள்ளன.இதனால் 500 எம் எல் டி அளவிற்கு நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . நகர் முழூக்க மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைய வேண்டியுள்ளது. நகரில் குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரம் போர்வெல்களில் 6900 போர்வெல்கள் உலர்ந்து போயுள்ளன. இதன் விளைவாக நகரின் புறப்பகுதிகளில் குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்களின் தாகத்தை தீர்க்க குடிநீர் வாரியம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முயற்சியாக புதிதாக 313 போர்வெல் கள் தோண்டும் பணியில் இறங்கியுள்ளது. இதன் வாயிலாக ஓரளவிற்கு குடிநீர் பிரச்சனையை சமாளிக்க வாரியம் முயன்று வருகிறது. 313 போர் வெல் களுக்கு வாரியம் 20 கோடி ரூபாய் செலவில் 200 போர்வெல்களும் மாநகராட்சி 11 கோடி செலவில் 113 போர்வெல்களும் தோண்டியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட 45 போர்வெல்களில் 42 வெற்றியடைந்துள்ளது. ஒரு போர்வெல்லை நிர்வகிக்க ஆண்டுக்கு 38 ஆயிரம் செலவு பிடிக்கிறது. இப்படி நீர்வாரியம் ஆண்டுக்கு 38 கோடி செலவு செய்து போர்வெல்களை நிர்வகித்து வருகிறது.