குடியரசு தினம் கோலாகலம்

புதுடெல்லி: ஜனவரி. 26 – 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பில் முதலில் எகிப்திய ஆயுதப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுத்துச் சென்றது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் எகிப்து ஆயுதப்படையின் முக்கியப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தக் குழுவை கர்னல் முகமது முகமது அப்தல் ஃபதா எல் கராஸாவி வழிநடத்தினார்.
முதன்முறையாக.. ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை ’என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா பேரணி இன்று நடைபெற்றுவருகிறது.
அதேபோல் அக்னிபாதை திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த முதல் படைப்பிரிவு வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்றனர்.
போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: முன்னதாக சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது குறிப்பினை பதிவிட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா நடைபெறும் கடமை பாதைக்கு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை வரவேற்றார்.