குடியரசு தின விழா-பெண் விமானி தலைமையில் கடற்படை அணிவகுப்பு

புதுடெல்லி: ஜன.21-
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்கும் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். கடற்படை அணியில் 3 பெண்கள் மற்றும் அக்னி பாதை திட்டத்தில் புதிதாக இணைந்த 5 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்த திஷா தற்போது அந்தமான் கடற்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:நான் தேசிய மாணவர் படையில் இருந்த போதே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த கனவு இப்போது நனவாகி உள்ளது. அதுவும் கடற்படை அணிக்கு தலைமை ஏற்பதை பெருமிதமாகக் கருதுகிறேன்.டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு ஒத்திகையை போலவே 26-ம் தேதி அணி வகுப்பிலும் நேர்த்தியாக அணி வகுப்பை நடத்துவோம்.இவ்வாறு அவர் தேரிவித்தார்.
திஷா மென்பொருள் பொறியா ளர். பெங்களூருவில் உள்ள பிஎம்எஸ் கல்லூரியில் பயின்ற அவர் தேசப்பற்று காரணமாக கடந்த 2016-ம் ஆண்டில் கடற் படையில் இணைந்தார்.தற்போது அவர் கடற்படையின் கண்காணிப்பு விமானத்தின் விமானியாகப் பணியாற்றி வருகிறார்.