குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ஈரோடு / நாமக்கல்: அக். 16-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை யால் ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. பவானியில் அதிகபட்சமாக 111 மிமீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், கோபி, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, பவானி சாகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன் தினம் மாலை தொடங்கி இரவு முழுவதும் கனமழை பெய்தது.
ஈரோடு நகர் பகுதியில் மல்லி நகர், சத்யா நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழைநீரால் பிச்சைக்காரன் பள்ளம், பெரும்பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெருந்துறையில் கனமழை பெய்த நிலையில், ஈரோடு – பெருந்துறை பிரதான சாலையில், செட்டித் தோப்பு பகுதியில், 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தாளவாடியில் சாலைகளில் ஓடிய வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பவானியில் அதிகபட்சமாக 111 மிமீ மழை பதிவானது.
நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் கனமழையாக மாறி விடிய விடியக் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்ந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: குமாரபாளையம் 81.20, பரமத்தி வேலூர் 78, கொல்லிமலை (செம்மேடு) 55, எருமப்பட்டி 50, திருச்செங்கோடு 44, மோகனூர் 40, நாமக்கல் நகரம் 37.20, ராசிபுரம் 28, சேந்தமங்கலம் 25, ஆட்சியர் அலுவலகம் 11.80, புதுச்சத்திரம் 10.40, மங்களபுரம் 4.60 மிமீ மழை பதிவானது.