குடும்பத்துடன் விபத்தில் இறந்ததாக நாடகமாடிய தொழில் அதிபர்

ராய்பூர், மார்ச். 15 – சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர். சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனை சரிகட்ட சமீரன் சிக்தர் பலரிடமும் கடன் வாங்கினார். வங்கியிலும் லோன் எடுத்தார். இதில் அவருக்கு ரூ.35 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் நெருக்கடி கொடுத்தனர். சமீரன் சிக்தர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்கான தவணை தொகையை அவர் முறையாக கட்டி வந்தார். தற்போது அவருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தவணையையும் கட்ட முடியாமல் அவர் தவித்தார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்சூரன்ஸ் எடுத்திருப்பதால் அவர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் பணம் கிடைக்கும். எனவே இந்த பணத்தை பெற என்ன செய்யலாம் என மீண்டும் தீவிரமாக யோசித்தார். அங்கு தனது நாடகத்தை சமீரன் சிக்தர் அரங்கேற்றினார். அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரித்தார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார். வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர். கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. காரில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிதிரிவது தெரியவந்தது.