குண்டு வெடிப்பு குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

பெங்களூரு, மார்ச் 6-
பெங்களூர் ஒயிட் பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடிகுண்டு வைத்த நபர் குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ அறிவித்துள்ளது.
சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும், முக்கிய குற்றவாளி மற்றும் அவனுக்கு உதவிய யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அதில் குற்றவாளி குறித்து எந்த வகையிலாவது தகவல் தரும் நபருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
080289510999-89042441100 என்ற எங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதி மதியம் 12.55 மணிக்கு ராமேஸ்வரம் ஓட்டலில் 10 வினாடிகளுக்குள் இரண்டு குண்டுகள் வெடித்தன. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 9 பேர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் இது சாதாரண வெடிப்பு என்று கருதப்பட்டாலும், பின்னர் இது தீவிரவாத செயல் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றவாளி யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மார்ச் 1ம் தேதி ஓட்டலுக்கு வந்து வெடிகுண்டை வைத்து சென்ற ஆசாமியை 6 நாட்களாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைய தினம் காலை 11.34 மணியளவில் ஓட்டலுக்குள் தொப்பி அணிந்து உள்ளே நுழைந்த மர்மநபர் ரவா இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு வெடிகுண்டை வைத்துவிட்டு 11.43 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியேறினான். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் பிறகு அந்த ஆசாமி எங்கு சென்றான் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில் அவனை எப்படியாவது கண்டுபிடித்து கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது