குண்டூரில் தபால் வாக்கு பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்காத அதிகாரிகள்

குண்டூர், மே 23- ஆந்திர மாநிலம், குண்டூரில் தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்கவில்லை. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு மாநில போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குண்டூர் மேற்கு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 4,126 பேர் தபால் வாக்கு செலுத்தினர். இந்த தபால் வாக்குகள் 12 பெட்டிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு இரும்பு பெட்டிக்கும் சிறிய பூட்டு போட்டு ‘சீல்’ வைக்கப்பட வேண்டும்.இந்நிலையில் பாதுகாப்பு மையத்தை அதிகாரிகள் நேற்று முன்தினம் வேறு இடத்துக்கு மாற்றினர்.அப்போது அனைத்து கட்சி வேட்பாளர்களும், அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது தபால் வாக்குகள் இருந்த இரும்பு பெட்டிகள் சிலவற்றில் பூட்டு இல்லை. சீலும் வைக்கப்படவில்லை. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது அதிகாரிகளின் அலட்சியப் போக்கா அல்லது ஏதேனும் முறைகேடு நடந்ததா என அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.