குப்பை லாரி மோதி நிதி ஆயோக் முன்னாள் பெண் ஊழியர் பலி

லண்டன்:மார்ச் 26- குருகிராமில் வசித்து வந்தவர் செசிதா கோச்சார். இவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பி. கோச்சார் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். நிதி ஆயோக்கில் கடந்த 2021-23-ம் ஆண்டு வரை ‘நேஷனல் பிகேவியரல் இன்சைட்ஸ் யுனிட் ஆப் இண்டியா’வில் செசிதா ஆலோசகராகப் பணியாற்றினார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்றார்.
அங்குள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில், நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முனைவர் (டாக்டர்) பட்டத்துக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அவருக்கு முன்னாள் அவரது கணவர் பிரசாந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பைகள் ஏற்றி வந்த லாரி வேகமாக மோதியது. அதை பார்த்த பிரசாந்த் உடனடியாக ஓடி சென்று காப்பாற்ற முயன்றார். அதற்குள் செசிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு வயது 33. இத்தகவலை நிதி ஆயோக்கின் முன்னாள் சிஇஓ தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.