குமரி பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

கோவை: மார்ச் 15: பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. காலை 11 மணியளவில் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு தேர்தல் கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். பின்னர், சாலை மார்க்கமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு சென்று பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிற்பகல் 12.15 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.