குமரி பொதுக் கூட்டத்தில் பேசும் மோடி

நாகர்கோவில்:மார்ச் 13: பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கெனவே பல்லடம், திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் அவர் பேசினார். இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் மீண்டும்தமிழகம், கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
கன்னியாகுமரிக்கு வரும் 16-ம்தேதி பிரதமர் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ஒருநாள் முன்னதாக வரும் 15-ம்தேதியே கன்னியாகுமரிக்கு பிரதமர்மோடி வருகிறார். அங்குள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும்பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இந்தக் கல்லூரி மைதானத்தை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஸ்குமார், குமரி மாவட்டஎஸ்.பி. சுந்தரவதனம் மற்றும் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மத்திய உளவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கன்னியாகுமரிக்கு நேற்று வந்தனர்.
பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். மைதானத்தை சீரமைத்து, மேடை அமைக்கும் பணியை நிறைவுசெய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.