குறைந்து வரும் ஊரக வேலை நாட்கள்

புதுடெல்லி: பிப்.28- கரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மனித வேலைநாட்கள் குறைந்து வருகின்றன. இது குறித்து ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2020-21-ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மனித வேலை நாட்கள் 3 கோடியே 89 லட்சமாக இருந்தது. இது இந்தாண்டில் இதுவரை 2 கோடியே 80 லட்சமாக உள்ளது.
கடந்த 2020-21-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 71,90,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 100 நாட்கள் வேலையை பெற்றனர். ஆனால் 2023-24-ம் ஆண்டில் இதுவரை 27,50,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை பெற்றுள்ளனர்.
இது குறித்து ஊரக மேம்பாட்டுத்துறையின் முன்னாள் செயலாளர் ஜூகல் கிஷோர் மொகபத்ரா கூறியதாவது: நகர்ப்புறங்களில் பொருளாதாரம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிடைக்கும் குறைந்த கூலி மற்றும் தாமதத்தால் இத்திட்டத்தின் மனித வேலை நாட்கள் குறைந்து வருகின்றன. விவசாய பணிகள் நன்றாக நடைபெற்றாலும் இத்திட்டத்தின் மனித வேலை நாட்கள் குறையும்.
கடந்த சில ஆண்டுகளாகவே, இத்திட்டத்தில் ஊதியம் சீராக இல்லை. பல மாநிலங்களுக்கு இத்திட்டத்துக்கான நிதி குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. சில மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிடைக்கும் ஊதியம், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக உள்ளது’’ என்றார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் சராசரிதின ஊதியம் ரூ.219-ஆக உள்ளது.இது விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவு எனகடந்த 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.