குலவிளக்கு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

ஈரோடு மொடக்குறிச்சி மொடக்குறிச்சிைய அடுத்த குலவிளக்கு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 22-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும் 28-ந் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று காலை ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. மாலையில் காவடி அழைத்தல், அக்னி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு பொங்கல் வைக்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து அன்னை சத்யா நண்பர்களின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இதையொட்டி மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டியும் தொடங்கி நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. பின்னர் மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.