குலாம்நபி ஆசாத்தை சந்தித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுடெல்லி, செப். 2-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். மேலும் ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளே பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜி-23 தலைவர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், அந்த குழுவில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியதோடு மிக விரைவில் புதிய கட்சியை தொடங்கப்போவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மகாராஷ்டிர முதல்-மந்திரி பிருத்விராஜ் சவான், அரியானா காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹுடா ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆனந்த் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் கட்சி தலைமை மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதோடு காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறி இருந்தார். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் காங்கிரஸ் கட்சியில் அப்படி ஒரு நடைமுறை இல்லை என்று மறுத்துவிட்டார்.
இதே போல பிருத்விராஜ் சவானும் ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கைப்பாவை தலைவர் தேவை இல்லை எனவும், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே தேவை எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் குலாம் நபி ஆசாத்தை சந்தித்த ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹுடா, பிருத்விராஜ் சவான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறிப்பாக அரியானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரி செல்ஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்பாளர் விவேக் பன்சாலுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பூபிந்தர் சிங் ஹுடா சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தை சந்தித்தது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதே போல ராகுல் காந்திக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதற்காக பிரித்விராஜ் சவான் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் ஏ.ஐ.சி.சி. செயலாளரான வீரேந்தர் வசிஷ்ட் கட்சியின் ஒழுங்குமுறை குழு தலைவர் தாரீக் அன்வாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.