குலாம் நபி ஆசாத் கருத்து

புதுடெல்லி:ஆக.18- பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துவாக இருந்தவர்கள், இந்து மதம் பழமையானது என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆஸாத் கருத்து கூறியுள்ளார்.
ஜனநாயக முற்போக்கு சுதந்திரக் கட்சியின்(டிபிஏபி) தலைவரான இவர், முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக 2004 முதல் 2008 வரை இருந்த குலாம்நபி, 2014 முதல் 2021 வரை மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். கடந்த ஆகஸ்ட் 26, 2022 இல் காங்கிரஸை விட்டு வெளியேறி தனியாகப் புதுக்கட்சி துவங்கினார்.
இதன் சார்பில் தற்போது ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறார்.
இதற்காக மாநிலம் முழுவதிலும் பிரச்சாரம் செய்து வரும் குலாம் நபி, நேற்று தோதா மாவட்டத்தின் பல மேடைகளில் பேசினார்.
தனது உரையில் டிபிஏபி தலைவர் குலாம் நபி கூறியதாவது: சில முஸ்லிம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் எனவும், பலர் இங்கேயே இருந்தவர்கள் என்றும் சில பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், இந்து மதம் என்பது மிகவும் பழமையானது.எனவே, பெரும்பாலான முஸ்லிம்கள், இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்கள். சுமார் 20 சதவிகிதத்தினர் மட்டுமே முகலாயர்கள் படையுடன் வெளியிலிருந்து வந்தவர்கள். இதற்கான உதாரணத்தை காஷ்மீரில் பார்க்கலாம்.