“குழந்தைகளின் மயானமாகிறது காசா; போரை நிறுத்த:ஐ.நா. வலியுறுத்தல்

நியூயார்க், நவ. 7-“காசா குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது.
4100 குழந்தைகள், 2640 பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பிராந்தியமே குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த காசாவையும் சுற்றிவளைத்து விட்டதாகவும் வடக்கு, தெற்கென்றில்லாமல் காசாவை இரண்டாகப் பிரித்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1400 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ்வசம் உள்ளனர்.
அதை கொஞ்சம் லாவகமாகச் செய்ய வேண்டும்: மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச அமைப்புகள், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் சென்று சேர்வதை உறுதி செய்யவும், பிணைக் கைதிகள் பத்திரமாக வெளியேற வழிவகுக்கவும் காசாவில் அவ்வப்போது சரியாக திட்டமிட்டு சற்றே லாவகமாக தாக்குதலை நிறுத்துவது பற்றி பரிசீலிப்போம். ஆனால் ஏற்கெனவே கூறியபடி போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பில்லை. போர் முடிந்த பின்னர் காசாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் சில காலம் எடுத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு இருக்கிறது” என்றார்.