குழந்தையுடன் வந்து மேடையில் பேசிய பெண் கலெக்டர்

திருவனந்தபுரம், நவ. 5 –
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ் ஐயர். திவ்யா எஸ் ஐயரின் கணவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். சமீபத்தில் பத்தினம்திட்டாவில் நடந்த ஒரு தனியார் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் தனது குழந்தையையும் அழைத்து சென்றார். மேடையில் அவர் பேசும்போது, குழந்தையை கையில் வைத்தபடி பேசினார். இதனை நிகழ்ச்சிக்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.கலெக்டர் திவ்யா எஸ் ஐயர், மேடையில் குழந்தையுடன் இருப்பதை பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து பதிவிட்டனர். அரசு பணியில் இருப்பவர் இதுபோன்று குழந்தையை பொதுநிகழ்ச்சிக்கு அழைத்து வருவது சரியல்ல என்றும் பலர் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஆனால் அவரது கணவர் சபரிநாதன், இதுபற்றி கூறும்போது, திவ்யா எஸ் ஐயர் விடுமுறை நாளில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டார். அது அரசு விழா இல்லை. இந்த நாட்டில் குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்களின் சிரமங்களை பற்றி தெரியாதவர்கள் தான் இதுபோன்று எதிர்கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.