குவைத்தில் வரலாறு காணாத வெயில்

குவைத், மார்ச் 21-உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக வெப்ப அலை வீசுவது என்பது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெப்ப அலை வீசுவது குறித்து அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குவைத் நகரமானது மக்கள் வாழ்வதற்கே தகுதி இல்லாத நகரமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இங்கே கோடை காலங்களில் 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குவைத்தில் 54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. உலகிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மூன்றாவது நிகழ்வு இது. ஆண்டுதோறும் இங்கே வெப்பநிலை அதிகரித்து வருவதால் படிப்படியாக மக்கள் வாழ்வதற்கும் பறவைகள் போன்ற உயிரினங்கள் வசிப்பதற்கும் தகுதியற்ற ஒரு நகரமாக மாறி வருகிறது. ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய சராசரி மழைப்பொழிவும் படிப்படியாக குறைந்து வருகிறது இதன் விளைவாக அடிக்கடி புழுதி சூறாவளி என்பது அதிகரித்து வருகிறது. கோடை காலங்களில் குவைத் நகரில் வெப்பநிலையானது சாதாரணமாக 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் தெருக்களில் கூட ஏசி பொருத்தப்பட்டு குளிர்ச்சியான நிலையை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. வெயில் தாங்காமல் பறவைகள் செத்து மடியும் காட்சிகள் அங்கிருந்து வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. ஆண்டுதோறும் குவைத் நகரில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது என தெரிவிக்கிறது மித்ராபா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை கண்காணிப்பு மையம். குறிப்பாக மே மாதங்களில் இங்கு கோடை வெப்பமானது உச்சத்தில் இருக்கிறது. எனவே குவைத் நகரில் கோடை காலங்களில் மக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கின்றனர். வெளியில் வந்து பணியாற்றும் மக்களுக்காக தெருக்களில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது குவைத் நகரம் 30 லட்சம் மக்கள் வசித்து வரக்கூடிய ஒரு நகரம். ஆனால் உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் நகரமும், உலகிலேயே குறைந்தபட்ச மழை பெய்யும் நகரமும் இது தான். குவைத் அரசு வெப்பநிலையை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் கூட இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்யலாம் என அறிவித்துள்ளது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை தரக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.
)தொடர்ந்து இவ்வளவு அதிக வெப்பநிலையில் இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் வரக்கூடும் என எச்சரிக்கின்றனர். அனைத்து வீடுகளிலும் பெரும்பாலும் நாள் முழுவதும் ஏசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே பயன்படுத்தப்படும் மொத்த மின்சாரத்தில் 67% ஏசி பயன்பாட்டிற்கே செல்கிறது. நவீனமான, சொகுசான பாதுகாப்பான நகரமாக இருந்தாலும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை நிலவக்கூடிய வெயிலை நினைத்தாலே தலை சுற்றுகிறது என்கின்றனர் குவைத் மக்கள்.