கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் பெரும் பாதிப்பு

புதுடில்லி : செப்டம்பர். 9 – ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவது அங்கு செய்யப்பட்டுள்ள முதலீட்டுக்கு மட்டுமின்றி அணுசக்தி துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழகத்தின் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் அணு எரிபொருளை தனி இடத்தில் பத்திரபடுத்தி வைக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பாதுகாப்பு காரணங்களுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது.அப்படி உத்தரவிட்டால் அங்கு செய்யப்பட்டுள்ள முதலீட்டுக்கு மட்டுமின்றி அணுசக்தி துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அணு எரிபொருளை தனியாக பத்திரப்படுத்தி வைக்கும் வசதி ஏற்படுத்துவது தொடர்பான பொது விசாரணைக்கான அட்டவணையை தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது