“கூடுதலாக 20 ரன்கள் எடுக்க தவறினோம்” – தோல்வி குறித்து டு பிளெஸ்ஸிஸ்

அகமதாபாத், மே 23 -நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த சூழலில் தோல்வி குறித்து ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தது. “எங்கள் அணி வீரர்கள் இந்த சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தனர். இறுதி வரை தங்களது ஆட்ட திறனை வெளிப்படுத்தி இருந்தனர். தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்திருந்தோம். அதற்கு அசாத்திய குணாதிசியம் வேண்டும். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் போதுமானது தான். ஏனெனில், தொடக்கத்தில் பந்து ஸ்விங் ஆனது. அதன் பிறகு ஆடுகளம் நிதானமானதாக மாறியது. இருந்தாலும் இந்த சீசனில் நாங்கள் அறிந்தது என்னவென்றால் இம்பாக்ட் வீரர் விதி இருக்கின்ற காரணத்தால் சராசரியை காட்டிலும் கூடுதலாக ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் பேட் செய்த போது கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் அந்த இலக்கை கடந்தது. இந்த வெற்றியின் மூலம் நாளை சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெறும் இராடவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.