கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: அக்டோபர் . 28 அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:கடந்த செப்.7ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ், அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெறும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்கள் பணித்திறன் மற்றும் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டுமுறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் மாநில அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகையாக, முனைவர் படிப்பு முடித்தால் ரூ.25 ஆயிரம், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமாக படித்திருந்தால் ரூ.20 ஆயிரம், பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.இந்த ஊக்கத்தொகை, உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழங்கப்பட வேண்டும்.அதன்படி, பதவியின் பணி நியமன விதிகள்படி அப்பதவிக்கான கட்டாய, விருப்பத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது. கல்விசார் அல்லது இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளில் பெறப்படும் உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை இல்லை. இருப்பினும், கூடுதல் கல்வித் தகுதியானது சம்பந்தப்பட்ட நபர் பணியாற்றும் பதவிகளுக்குரிய பணிகளுக்கோ, அல்லது அடுத்த உயர் பதவிக்கான பணிகளை ஆற்றுவதற்கோ நேரடியாக தொடர்புடையதாக இருந்தால் ஊக்கத் தொகை பெற அனுமதிக்கலாம்.துறை, பதவி நிலை, வகைப்பாட்டை பொருட்படுத்தாமல் அனைத்து பதவிகளுக்கும் இந்த ஊக்கத்தொகை அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அரசுப்பணியாளர் ஒருவர் கூடுதல் கல்வித்தகுதி பெற அரசால் அனுப்பப்பட்டிருந்தாலோ, கல்வி விடுப்பை பயன்படுத்தி கூடுதல் கல்வித்தகுதி அடைந்திருந்தாலோ அவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை இல்லை.அரசுப்பணியாளர் ஒருவர் பணியில் சேர்ந்த பின் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பணியமர்த்தப்படும் பதவிக்கு தேவையான கல்வித்தகுதி தளர்த்தப்பட்டிருந்தால் இந்த தொகை அனுமதிக்கப்படாது. ஊக்கத் தொகை குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளியில், அவர்களின் பணிக் காலத்தில் அதிகபட்சம் 2 முறை மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர் கூடுதல் கல்வித்தகுதி பெற்ற 6 மாதத்துக்குள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை கல்வி தகுதி பெற்ற பின்பு தான் வழங்க வேண்டும் அதற்கு முன் வழங்கக்கூடாது. இதுகுறித்து துறைகள் தனித்தனியாக வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.